காதல் தோல்வியா? மர்ம காரணமா? முத்தையாபுரத்தில் வேப்பமரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த வாலிபர்... போலீஸ் தீவிர விசாரணை!

காதல் தோல்வியா? மர்ம காரணமா? முத்தையாபுரத்தில் வேப்பமரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த வாலிபர்... போலீஸ் தீவிர விசாரணை!

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் 36 வயது வாலிபர் ஒருவர் வேப்பமரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமியின் மகன் முனியசாமி என்ற சுரேஷ் (36). திருமணம் ஆகாத இவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் காதல் தோல்வி மற்றும் காதல் உணர்வுகள் தொடர்பான பதிவுகள், ஸ்டேட்டஸ்கள் ஆகியவற்றை தொடர்ந்து பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு முத்தையாபுரம் பள்ளிவாசல் அருகே உள்ள வேப்பமரத்தில் சுரேஷ் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் சுரேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை.

சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட காதல் தொடர்பான பதிவுகள் காரணமாக மன உளைச்சலில் இருந்தாரா அல்லது குடும்ப பிரச்சினை உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.