"நெட்டூர் வன்கொடுமைக்கு எதிராக தூத்துக்குடியில் கொந்தளிப்பு... குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை!"

நெட்டூர் வன்கொடுமையை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி, ஜூன் 3: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் திருமண நிகழ்ச்சியில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நெட்டூரில் நடைபெற்ற தாக்குதல் மனிதநேயமற்ற மற்றும் ஜனநாயக விரோதச் செயலாகக் கண்டிக்கப்பட்டது. மேலும், கடந்த ஐந்து மாதங்களில் தென்காசி மாவட்டத்தில் இதுபோன்ற எட்டு வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன இதனை கண்டித்து கண்டனுரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் தி. சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே. காசி, மாவட்டப் பொருளாளர் ஏ. வயண பெருமாள், உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.ரசல், மக்கள் ஒற்றுமை மேடை தா.ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகராஜ் , ரவிச்சந்திரன், எம் எஸ் முத்து, சங்கரன், கருப்பசாமி வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் நேசமணி , மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் ராம் குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் சிவநாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

, நெட்டூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு, நிவாரண உதவிகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நெட்டூர் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.