உடல் உறுப்பு தானம் செய்த வாலிபரின் உடலுக்கு அமைச்சர் கீதாஜீவன் அஞ்சலி!

உடல் உறுப்பு தானம் செய்த வாலிபரின் உடலுக்கு அமைச்சர் கீதாஜீவன் அஞ்சலி!

தூத்துக்குடியில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட வாலிபரின் உடலுக்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் மேலமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமுத்து மகன் தனசிங் (21). இவர் பைக் விபத்தில் படுகாயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து அவரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து ஒப்புதல் அளித்தனர்.  

உறவினர்களின் ஒப்புலுக்கு பின்னர் தனசிங் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை திசு அறுவைசிகிச்சை மூலம் பிரித்து தானமாக பெறப்பட்டது. அவரது கல்லீரல் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சிக்கும், இன்னொரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் 2 கண்களும் திருநெல்வேலி அரவிந்த் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. 

பின்னர் தனசிங் உடலுக்கு அரசு சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவரது உடலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அரசு மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உள்ளிட்டோர் மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊரான மேல மடம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வந்து பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்பு தகனம் செய்யப்பட்டது.