கோவில்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலைக்கு முயற்சி?

கோவில்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலைக்கு முயற்சி?

கோவில்பட்டி கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.

இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் சிறுவனின் தந்தை கார்த்திக் முருகன், தாய் பாலசுந்தரி, தாத்தா கருத்த பாண்டி என 3 பேரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் அதனை தடுத்தது மட்டுமின்றி, அவர்கள் எழுதிய கடிதத்தையும் வாங்கி கிழித்து போட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கடிததத்தில், எங்களது மகன் ஏன் இறந்தான் என்று தெரியவில்லை. பாசமாக வளர்த்த மகனே போய் விட்டான். நாங்கள் இருந்து என்ன செய்ய? மகன் கொலையில் குற்றவாளிகளையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இனி நாங்கள் வாழ்வதில் எங்களுக்கு அர்த்தம் இல்லை என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.