தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம்;நாட்டு வெடிகுண்டுகள் வீசிலாரி அதிபர் வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக வெடிகுண்டுகள் வீசி லாரி அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம்;நாட்டு வெடிகுண்டுகள் வீசிலாரி அதிபர் வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசி லாரி அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). லாரி அதிபரான இவர், சங்கரப்பேரி ரோட்டில் லாரி புக்கிங் அலுவலகமும் நடத்தி வந்தார். நேற்று மாலை 5.50 மணி அளவில் அலுவலகத்தில் இவர் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு 4 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்தது. அவர்கள் திடீரென மறைத்து வைத்து இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை சக்திவேல் மீது வீசினர். அவை சக்திவேல் அமர்ந்து இருந்த இடத்தின் அருகில் உள்ள சுவரில் பட்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனால் மீண்டும் ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினர். ஆனால், அந்த குண்டு வெடிக்காமல் கீழே விழுந்தது. தொடர்ந்து 4 பேரும் சுற்றி வளைத்து சக்திவேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். 

தகவல் அறிந்ததும் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்தியராஜ், ரூரல் டிஎஸ்பி சுரேஷ், சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சக்திவேல் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மோப்பநாய் ஜூனோ வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மெயின் ரோடு வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவில் துறை உதவி இயக்குனர் கலாலட்சுமி தலைமையிலான தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 2017-ம் ஆண்டு சங்கரப்பேரியில் அங்குசாமி என்ற ஈசுவரன் என்பவரை குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி உள்பட 5 பேர் சேர்ந்து கொலை செய்தனர். அதன்பிறகு அந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. கருப்பசாமி மட்டும் அங்கு இருந்தார். அவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தனியாக ஆதரவாளர்களையும் சேர்த்து கொண்டு வலம் வந்துள்ளார். இந்தநிலையில் அங்குசாமியின் ஆதரவாளர்கள் கடந்த 28.1.23 அன்று சங்கரப்பேரியில் வைத்து கருப்பசாமியை வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட சக்திவேல் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பிறகு சக்திவேல் பாதுகாப்பாக இருந்து வந்தார். 

நேற்று மாலையில் முதல் முறையாக அலுவலகத்துக்கு வந்துள்ளார். இதனை அறிந்த கருப்பசாமியின் ஆதரவாளர்கள் அங்கு வந்து சக்திவேலை பழிக்குப்பழியாக கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 4 பேருக்கு வலைவீச்சு இதனை தொடர்ந்து தாளமுத்துநகரை சேர்ந்த ஒரு வாலிபர் உள்பட 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக வெடிகுண்டுகள் வீசி லாரி அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.