தூத்துக்குடியில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளை? அரசு உத்தரவை மதிக்காமல் பெற்றோரிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக மாணவர் சங்கம் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சில தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்து வருவதாக இந்திய மாணவர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ச.மாடசாமி மற்றும் மாவட்ட செயலாளர் ர.ராம்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் அறிவுறுத்தியபடி, தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கல்விக் கட்டண விவரங்களை பெற்றோர்கள் அறியும் வகையில் பள்ளி வளாகத்தில் அறிவிப்பு பலகையில் வெளிப்படையாக காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், தூத்துக்குடியில் இயங்கி வரும் பல தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனியார் பள்ளிகள் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்காமல் செயல்படுவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துவதாக இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து சிறப்பு ஆய்வுக்குழு அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கை தற்போது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.