சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 16 வயது சிறுமி கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கருப்பையா (45) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிபதி பிரீத்தா குற்றவாளியை தண்டித்து முக்கிய தீர்ப்பை வழங்கினார்.

அதன்படி,

சிறுமியைக் கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம்,

பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம்,

கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம்

என அனைத்து தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, சாட்சிகளை வலுவாக முன்வைத்து தண்டனை பெற்றுத் தந்த போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.

???? இந்த தீர்ப்பு, சிறுமிகள் மீதான குற்றங்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.