வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல்... பச்சை முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் !

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு நன்றி. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை செய்தி வடிவில் நாம் வழங்கி வருகிறோம், இன்றைய உணவு பாதுகாப்பு குறித்த தகவலை வாங்க அறிந்து கொள்ளலாம்...

வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல்... பச்சை முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் !
வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல்... பச்சை முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் !

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு நன்றி. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை செய்தி வடிவில் நாம் வழங்கி வருகிறோம், இன்றைய உணவு பாதுகாப்பு குறித்த தகவலை வாங்க அறிந்து கொள்ளலாம்...

தலைப்பு: முட்டை - பகுதி-2

நமது ஊர் சினிமாக்களில் கட்டுமஸ்தான உடல் கொண்ட நடிகர்கள் அதிலும் குறிப்பாக, வில்லன் கதாபாத்திரங்கள் பச்சை முட்டைகளைக் (Raw Eggs) குடிப்பது போன்ற காட்சிகளை அதிகம் பார்த்திருப்போம். அவ்வளவு ஏன், நமது ஊரிலேயே உடல் இளைத்தவர்களை பச்சை முட்டையை குடிக்க வைப்பார்கள். அவ்வாறு முட்டையை சமைக்காமல் பச்சையாக அருந்துவது உடல் நலத்திற்கு ஏற்றதா என்று கேட்டால், பல மருத்துவர்கள் மற்றும் உணவு அறிஞர்களின் பதில், பெரும்பாலும் இல்லை என்பதுதான். ஏனென்றால், பச்சை முட்டையில் உள்ள கிருமிகள் ஒருபுறம் முக்கிய காரணம் எனில், அதில் உள்ள அவிடின் என்ற புரதச் சத்து மற்றொரு காரணமாக அமைகின்றது. எனவே, இன்று முட்டையை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதில் உள்ள தீங்கு மற்றும் முட்டையை கிருமிநீக்கம் செய்யும் முறை குறித்து பார்ப்போம். (கொஞ்சம் நீண்ட பதிவுதான். பொருத்தருள்க.!)

#முட்டையை சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள அவிடின் என்ற புரதச்சத்து, முட்டையில் உள்ள பயோட்டின் என்ற முக்கிய நுண்ணூட்டச் சத்தினையும், புரதச் சத்தினையும், நமது சிறுகுடலில் உட்கிரகிப்பதைத் தடுக்கின்றது.  இதனால், நாம் முட்டை சாப்பிட்டாலும், அதற்கேற்ற அளவு ஊட்டச்சத்து நமக்கு கிடைப்பதில்லை.

# பச்சை முட்டையில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உட்பட அநேக பாக்டீரியாக்கள் (E-coli, Bacillus etc.,) உள்ளன.  முட்டையை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால், இந்தக் கிருமிகளால், நமக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

#மேலே சொன்ன பாக்டீரியாக்கள் குளிர் மற்றும் மிதமான வெப்பநிலையில் பல்கி பெருகும் தன்மையுடையவை. அதனால், பச்சை முட்டையை கிருமிநீக்கி பதப்படுத்தாமல், குளிர்பதனப்பெட்டியில் இருப்பு வைத்து, சில நாட்கள் கழித்து, பச்சையாகக் குடித்தாலோ அல்லது மையோனைஸ் செய்து சாப்பிட்டாலோ, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, முட்டையை குளிர்பதனப்பெட்டியில் வைப்பதற்கு முன்னர், கிருமிநீக்கம் செய்து, பதப்படுத்த வேண்டும்.

முட்டையை எவ்வாறு கிருமிநீக்கம் செய்ய வேண்டும் என்ற செயல்முறை:

அ: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதன் பின்னர் முட்டைகளை வைக்க வேண்டும். முட்டைகளுக்கு இடையே சற்று இடைவெளி அவசியம். தண்ணீர் முட்டைக்கு மேல் 1 இன்ச் அளவில் தான் இருக்க வேண்டும்.

ஆ: அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரும் வரை மிதமாக சூடுபடுத்த வேண்டும். வெப்பமானி (Thermometer) உதவியுடன் வெப்பநிலையைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். வெப்பமானி இல்லையென்றால், பாத்திரத்தின் அடிப்பகுதியில் சிறுகுமிழ்கள் (Bubbles) உருவாகும் வரை சூடுபடுத்தலாம்.

இ: முட்டையுள்ள பாத்திரத்தை 60-61 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 நிமிடங்கள் வரை சூடுபடுத்த வேண்டும். ஆனால், எக்காரணம் கொண்டும், 65 டிகிரி செல்சியஸிற்கு மேல் சூடுபடுத்தக்கூடாது. (அதற்கு மேலே சென்றால் முட்டை வேக ஆரம்பித்துவிடும்… அவ்வளவுதான்!) வெப்பமானி இல்லாதோர், பாத்திரத்தின் அடியில் சிறுகுமிழ்கள் ஆரம்பித்ததிலிருந்து, 3-5 நிமிடங்கள் வரை சூடுபடுத்தலாம்.

ஈ: அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, குழாயிலிருந்து ஓடும் தண்ணீரில் கழுவி, முட்டையை அறை வெப்பநிலைக்குக் கொண்டுவர வேண்டும். அல்லது மிதமான குளிர்ந்த நீர் உள்ள பாத்திரத்தில் கழுவலாம்.

உ: அதன் பின்னர், முட்டைகளைத் துடைத்துவிட்டு, குளிர்பதனப்பெட்டியில், குளிரூட்டும் பகுதியில் (cold compartment) வைக்க வேண்டும்.

ஊ: இவ்வாறு கிருமிநீக்கம் செய்து, குளிர்பதனப்பெட்டியிலேயே 5 வாரங்கள் வரை வைத்திருந்து, அம்முட்டைகளைப் பயன்படுத்தலாம்.

#முட்டையை வாங்கி, அறை வெப்பநிலையிலேயே வைத்திருந்து, 2-3 தினங்களுக்குள் சமைத்து சாப்பிடத் தீர்மானித்திருந்தால், கிருமிநீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரடியாக சமைத்து சாப்பிடலாம்.

#பச்சை முட்டைகளைக் கையாண்ட பின்னர், மற்ற உணவுப் பொருட்களை கையாளுவதற்கு முன்னரும், ஏதாவது உணவுப் பொருளை (நொறுக்குத் தீனி உட்பட) சாப்பிடுவதற்கு முன்னரும், கை கழுவ வேண்டியது மிகவும் அவசியம். சுருங்கச் சொல்வதானால், முட்டைகளைத் தொட்டுவிட்டால், அடுத்த வேலைக்குச் செல்லும் முன்னர் கை கழுவுதல் வேண்டும்.

சந்தையில் கிருமிநீக்கம் செய்த பதப்படுத்தப்பட்ட முட்டைகள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்றது. எனவே, பதப்படுத்தப்பட்ட முட்டையைத் தேடி அலைய வேண்டாம் நண்பர்களே..!

நாளை…..லெக்கான் கோழி முட்டை vs நாட்டுக் கோழி முட்டை… எது சிறந்தது என்பது குறித்தான தகவல் பகிரப்படும்..!

நன்றி:டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ்., எம்.பி.எச்.,

நியமன அலுவலர்,உணவு பாதுகாப்புத் துறை,

தூத்துக்குடி மாவட்டம்.

For complaints: 9444042322

++++++++++++++++++++++++++++++