கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை மாற்றி கொடுத்தால் பச்சிளம் குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு: பெற்றோர் புகார்!!

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை மாற்றி கொடுத்தால் பச்சிளம் குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு: பெற்றோர் புகார்!!

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை மாற்றி கொடுத்தால் பச்சிளம் குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு: பெற்றோர் புகார்!!

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தைக்கு, மாத்திரையை மாற்றி கொடுத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேஸ்வரன் - சிந்து தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு கடந்த 60 நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை (கனிஷ்காஸ்ரீ) கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்துள்ளது. அந்த பெண்குழந்தைக்கு கடந்த 31ந்தேதி கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகேஸ்வரன் - சிந்து தம்பதியினர் தடுப்பு ஊசி போட்டுள்ளனர். மேலும் தடுப்பு ஊசி போட்ட பின்னர் காய்ச்சல் வந்தால் அதற்காக மாத்திரை எடுத்துக் கொள்ளும்படி பணியில் இருந்த மருத்துவர் மகேஸ்வரன் - சிந்து தம்பதியினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். 

மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையும் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பெற்றுச் சென்றுள்ளனர். இதன் பின்னர் வீட்டிற்கு சென்றது குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகேஸ்வரன் - சிந்து தம்பதியினர் அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரையை குழந்தைக்கு கொடுத்துள்ளனர். மாத்திரை கொடுத்த சிறிது நேரத்தில் குழந்தையின் கை, கால்கள் நிற்காமல் ஆட தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரன் தம்பதியினர் பச்சிளம் குழந்தையை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். முதலில் குழந்தையை பரிசோதனை செய்த ஊழியர்கள் மழை பெய்த காரணத்தினால் நடுக்கம் இருக்கும் என்று கூறியுள்ளனர். 

பின்னர் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தைக்கு கொடுத்த மாத்திரையை குறித்து கேட்டுள்ளார். அப்போது மகேஸ்வரன் - சிந்து தம்பதியினர் அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரையை காண்பித்ததும் , பரிசோதனை செய்த மருத்துவர் உங்களுக்கு யார் இந்த மாத்திரை கொடுத்தது, இது சளிக்கு வழங்க கூடிய மாத்திரை. என்று கூறியதும் அந்த பச்சிளம் குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது குழந்தைக்கு பிரச்சினை இல்லை.. நடுக்கம் நிற்க வேண்டும் என்றால் நரம்பியல் மருத்துவர் தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

கடந்த 31ந்தேதி முதல் நேற்று வரை நரம்பியல் மருத்துவர் வந்து சிகிச்சை அளிக்கவில்லை என்பதால் மகேஸ்வரன் - சிந்து தம்பதியினர் தங்களது குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி போட்டு தனது குழந்தைக்கு மாத்திரையை மாற்றி கொடுத்த காரணத்தினால் கை, கால் நடுக்கம் தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும், நரம்பியல் மருத்துவரும் பரிசோதனை செய்யவில்லை, தனது குழந்தையை காப்பாற்ற வேண்டும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் கூறுகிறார் பச்சிளம் குழந்தையின் தந்தை மகேஸ்வரன்.

இது குறித்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர் அகத்தியனிடம் கேட்டபோது தடுப்பூசி போட்ட போது மருத்துவர் சரியான மாத்திரை தான் பரிந்துரைத்துள்ளார். இவர்கள் வாங்கியவர்கள் தவறாக வாங்கி சென்றிருக்கலாம். குழந்தைக்கு மாத்திரை வாங்கும்போது வேற சிலருக்கு வாங்கி இருக்கலாம், அதில் மாத்திரையை மாற்றி கொடுத்திருக்கலாம். குழந்தைகள் மருத்துவர் பரிசோதனை செய்து குழந்தை நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

நரம்பியல் மருத்துவர் வாரத்திற்கு ஒரு நாள் (திங்கள் கிழமை) மட்டும் தான் வருவதாகவும், அவசரம் என்றால் அழைத்துக் கொள்வோம், கூடுதலாக இங்கே வருகை புரியவும், நிரந்தரமாக நரம்பியல் மருத்துவர் நியமிக்கவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும், மேலும் நிரந்தரமாக நரம்பியல் மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தடுப்பு ஊசி போட்டு குழந்தைக்கு மாத்திரை மாற்றி கொடுத்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.