குரூஸ் பர்னாந்து மணி மண்டபம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
குரூஸ் பர்னாந்து மணி மண்டபம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடியில் ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குரூஸ் பர்னாந்து மணி மண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலை பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையினை இன்று (15/11/2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்ததிஸ் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909-ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கி உள்ளார். 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார்.
இந்தக் குடி நீர்ப்பிரச்சினைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் "தூத்துக்குடி மக்களின் தந்தை" என போற்றப்படுகிறார். தூத்துக்குடி மக்களின் தந்தை என்று அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களைப் போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டு. 14.10.2022 அன்று உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.