தூத்துக்குடி துறைமுகத்தில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசைக் கண்டித்து மே 20 அன்று அறிவித்திருந்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நாட்டில் தற்போது நிலவும் சூழல் காரணமாக ஜுலை 9 க்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்று நாடு தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்த அழைப்பு விடுத்திருந்தன.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்திருந்த 8 தொழிற்சங்கங்களான துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு, போர்ட் மெரைனர்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் ஹெச்எம்எஸ், போர்ட் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் ஹெச்எம்எஸ்(ஒர்க்கர்ஸ்), போர்ட் டிம்பிளாயீஸ் டிரேடு யூனியன், நேசனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன் ஐஎன்டியுசி, போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் ஏஐடியுசி, போர்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன், போர்ட் அண்ணா டாக் அன்ட் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் அஇஅதிமுக சங்கங்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்தன.
அதனடிப்படையில் இன்று மதியம் துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு துறைமுக ஆணையக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலகிருஷ்ணன், துறைமுகம் சத்யா, தலைமையில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பில் கே.காசி, வீ.ஆறுமுக நயினார், இ.மீனாட்சி சுந்தரேசன், ஹெக்எம்எஸ் சார்பில் இஸ்மாயில், அமிர்தராஜ், ராமர், ஹெச்எம்எஸ் (ஒர்க்கர்ஸ்) சார்பில் ஜாண்கென்னடி, கிளிங்டன், மோசஸ், ஜெயா, ஐஎன்டியுசி சார்பில் ராஜகோபாலன், பால்ராஜ், பெட்டு ஐஎன்டியுசி சார்பில் கனகராஜ், முத்துமாடசாமி, ஏஐடியுசி சார்பில் தனசேகர், ஜெனரல் ஸ்டாப் யூனியன் ஆரோக்கியராஜ். பிரவீன், அண்ணா டாக் சார்பில் சண்முககுமாரி ஆகியோர் உள்ளிட்ட 200 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 4 தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும். பெரிய துறைமுகங்கள் உள்ளிட்டு பொதுத்துறை நிறுவனங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் தேசிய பணமாக்கல் திட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசு துறைகளில் பணிசெய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும்.
துறைமுக தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சலுகைகளை பறிப்பதை கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந்தபடி ஒய்வூதியர்களுக்கு இரண்டாம் வழிமுறைபடி பென்சன் கணக்கிட வேண்டும். துறைமுகம் சாராத பணிகளில் ஈடுபடுவதை கைவிட்டு துறைமுகத்தின் கப்பல், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும். ஆகிய கோரிக்கைகள் வலியுறத்தப்பட்டன. அரசின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் ஜீலை 9 நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பது என்றும் அறிவித்தனர்.