லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாப சாவு : தாய் கண் எதிரே பரிதாபம்
மெஞ்ஞானபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்..
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சிவந்தியாநகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி கனகம்மாள். இவர்களுக்கு பெருமாள் (வயது 16) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. மன்னார்புரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பெருமாள் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தர்மராஜ் இறந்து விட்டார்.
இந்த நிலையில் கனகம்மாளின் உறவினரின் திருமணம் நேற்று திருச்செந்தூர் கோவிலில் நடந்தது. இதில் கனகம்மாள் தன்னுடைய மகனுடன் கலந்து கொண்டார். திருமணம் முடிந்ததும் சாத்தான்குளம் தனியார் மண்டபத்தில் வரவேற்பு விழா நடந்தது. எனவே திருச்செந்தூரில் இருந்து புதுமண தம்பதிகள் மற்றும் உறவினர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சாத்தான்குளத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
அப்போது பெருமாள் தன்னுடைய நண்பர்களான லட்சுமணன், சதீஷ் ஆகியோருடன் திருச்செந்தூரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சாத்தான்குளத்துக்கு புறப்பட்டு சென்றார். மெஞ்ஞானபுரம் பஜாரில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பெருமாள், லட்சுமணன், சதீஷ் ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது பெருமாளின் வயிற்றில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பெருமாள் இறந்ததாக தெரிவித்தனர். காயம் அடைந்த லட்சுமணன், சதீஷ் ஆகிய 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான நாங்குநேரி அருகே சடையன்கிணறு வெங்கட்ராயபுரம் வீரணன்சேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் விஜயகுமாரை (39) கைது செய்தனர். விபத்து நிகழ்ந்த சிறிதுநேரத்தில், திருமண கோஷ்டியினர் வந்த வேனில் இருந்த கனகம்மாள் மற்றும் உறவினர்கள், அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெருமாளைப் பார்த்து தாயார் கனகம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.