கயத்தாறு அருகே பாலத்தில் லாரி மோதி விபத்து: டிரைவர் பலி!

கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் நாற்கர சாலையில் உள்ள பாலத்தின் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு பலசரக்கு சாமான்களை ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி வந்த லாரியை மதுரை கணக்கன்குளத்தை சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் குமார் (21) என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 3 மணியளவில் தளவாய்புரம் அருகே வரும் போது, பாலத்தின் திட்டில் எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் லாரி டிரைவர் மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த லாரி உரிமையாளர் கண்ணன் படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.