தூத்துக்குடி AVM வளாகத்தில் பெரும் தீ விபத்து – 100 டன் பஞ்சு எரிந்து சேதம், அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு

தூத்துக்குடி AVM வளாகத்தில் பெரும் தீ விபத்து – 100 டன் பஞ்சு எரிந்து சேதம், அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள AVM என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் நிறுவன  வளாகத்தில் உள்ள குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆலை வளாகத்தின் ஒரு பகுதியில் முதியவர்களுக்கு பயன்படுத்தப்படும் அடல்ட் டயப்பர்கள் தயாரிப்பதற்காக இலவம் பஞ்சுகள் மற்றும் பல்வேறு மூலப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த டயப்பர் தயாரிப்பு நிறுவனமான கமல் ஹெல்த் கேர் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் AVM Super Dry Adult Diaper பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அந்த குடோனில் தேக்கி வைக்கப்பட்டிருந்த இலவம் பஞ்சுகளில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென வேகமாக பரவி மேலே உயர்ந்து எரிய தொடங்கியது. இதன் காரணமாக அந்த ஆலை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த தீவிரமாக போராடினர். மேலும் அருகில் அமைந்துள்ள தேங்காய் எண்ணெய் ஆலையில் தீ பரவாமல் தடுக்கும் பணியிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவம் பஞ்சுகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 100 டன் பஞ்சு மற்றும் டயபர் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் இந்த தீ விபத்தில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.