“தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு இடமில்லை” – தூத்துக்குடி இப்தார் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

“தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு இடமில்லை” – தூத்துக்குடி இப்தார் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடியில் இஸ்லாமிய கலாச்சாரம் பேரவை மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி இணைந்து நடத்திய மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஹசன் தலைமை வகித்தார். மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அப்பாஸ் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலத்தில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மற்ற மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்திய சில சக்திகள் தமிழகத்திலும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன. அவற்றிற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தளபதி வழியில் சரியான பதிலை வழங்கும் என தெரிவித்தார்.

மேலும், திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும் சமமான நலன் கிடைக்கிறது என்றும், ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றலாம் என்றும் கூறினார்.

சிலர் தங்களது கொள்கைகளை கட்டாயப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாங்கள் மதத்தை மதிக்கிறோம், மத வெறியை எதிர்க்கிறோம் என்று அவர் வலியுறுத்தினார்.

அடுத்த தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி, முதல்வர் நிர்ணயித்துள்ள 200 தொகுதி இலக்கை தாண்டி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் அமைச்சர் கீதாஜீவன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்க மாநில அமைப்பு செயலாளர் சுந்தரி மைந்தன், விசிக மாவட்ட செயலாளர் விமல்வங்காளியார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன்,  தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதார் பிஸ்மி, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட துணை தலைவர் மைதீன்கனி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப், மக்கள் நீதிமய்யம் கட்சி மாவட்ட செயலாளர் ஜவஹர், மதிமுக நிர்வாகிகள் நக்கீரன், பேச்சிராஜ் மகாராஜன், பொன்ராஜ் உள்பட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு இப்தார் நோன்பில் பங்கேற்றனர்.