தூத்துக்குடியில் காங்கிரஸுக்கு பேரதிர்ச்சி..! முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் உட்பட 50 பேர் திமுகவில் இணைவு..!

தூத்துக்குடியில் காங்கிரஸுக்கு பேரதிர்ச்சி..! முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் உட்பட 50 பேர் திமுகவில் இணைவு..!

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் முரளிதரன் மற்றும் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த சம்பவம் தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலையில் எட்டையாபுரம் சாலை கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். அவர்களுக்கு கருப்பு-சிவப்பு சால்வை அணிவித்து கீதா ஜீவன் வரவேற்பளித்தார்.

இந்த இணைவு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், மண்டலத் தலைவர் ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சாந்திமேரி, விவசாய அணி தலைவர் பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெயகிங்ஸ்டன் மற்றும் 27 வார்டு தலைவர்கள் உட்பட பலர் திமுகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முரளிதரன், “14 ஆண்டுகளாக திமுகவுடன் இணக்கமாக இருந்த காங்கிரஸ் தலைமை தற்போது கொள்கைகளைத் துறந்துவிட்டு இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. தூத்துக்குடி காங்கிரஸ் தலைவர்கள் சகாயராஜ் மற்றும் பெருமாள்சாமி கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டனர்” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “36 ஆண்டுகள் காங்கிரஸில் உழைத்த எங்களது கருத்துக்களை கட்சித் தலைமை மதிக்கவில்லை. தவெக தலைவர் விஜய் பாஜகவின் ஒரு அங்கமாகவே செயல்படுகிறார். உண்மையான காங்கிரஸாரான நாங்கள் இனி கடைசி வரை திமுகவிற்கு விசுவாசமாக பணியாற்றுவோம்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட மண்டல மற்றும் பகுதி செயலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.