தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செல்போன் திருட்டுக்கள் அதிகரிப்பு : பொதுமக்கள் புகார்!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்போன் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளனது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் நோயாளிகளுக்கு உதவியாக வரும் நபர்களின் செல்போன்கள் அடிக்கடி திருடுபோய் விடுகின்றன.
இதுபோல் மருத்துவமனை ஊழியர்களிடமும் செல்போன்களும் திருடுபோய் விடுகின்றன. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. போலீசாரும் கண்டுகொள்வதில்லை. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த சில வாரங்களில் மட்டுமே நூற்றுக் கணக்கான செல்போன்கள் திருடுபோயிருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவமனை அதிகாரிகளிடம் சிசிடிவி காட்சிகளை கேட்டால் அது இயங்கவில்லை என்று கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தால் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறுகின்றனர். தூத்துக்குடி மாநகர காவல்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து பொதுமக்களின் உடமைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், மருத்துவமனையில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.