மகன் மீதான பலாத்கார வழக்கை ரத்து செய்ய கோரிக்கை : ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தர்ணா!

தூத்துக்குடியில், தன் மகன் மீது போடப்பட்டுள்ள பாலியல் பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தாயார் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (45) என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எனது மகன் அஜித்குமார் அண்ணா நகரைச் சேர்ந்த 38 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
வயது வித்தியாசத்தை காரணம் காட்டி எனது மகனை கண்டிக்கவே அந்த பெண்ணுடன் பழகுவதை எனது மகன் விட்டுவிட்டார். ஆனால் அந்த பெண் உன்னை விட வேண்டும் என்றால் ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உன்னை சும்மா விட மாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் என் மகன் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த பெண்ணுக்கு வாலிபர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிப்பதே வழக்கம். அவர் தொடர்பான ஆதாரங்கள் இருந்தும் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காவல்துறையும் எதையும் பொருட்படுத்தவில்லை. எனவே என் மகன் மீது பதியப்பட்ட கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.