நீட் ரத்து செய்யாவிட்டால் மாணவர் எழுச்சி தொடரும்” – தூத்துக்குடியில் மாணவர், வாலிபர் அமைப்புகள் மாபெரும் போராட்டம்!

நீட் ரத்து செய்யாவிட்டால் மாணவர் எழுச்சி தொடரும்” – தூத்துக்குடியில் மாணவர், வாலிபர் அமைப்புகள் மாபெரும் போராட்டம்!

ஒன்றிய மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள நீட் தேர்வு ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் தமிழ்வழிக் கல்வி மாணவர்களின் மருத்துவ கனவுகளை சிதைத்து வருவதாக குற்றம் சாட்டி, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை இந்திய மாணவர் சங்கமும் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் (DYFI) இணைந்து முன்னெடுத்தன.

மேலும், நீட் தேர்வில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும், தேசிய தேர்வு முகமை (NTA) உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அதேபோல், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நேசமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி உள்ளிட்ட மாணவர் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு நீட் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் தூத்துக்குடி பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.