“எங்கள் இடத்தை மீட்டு தருங்கள்”... தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர்கள், தாங்கள் பயன்படுத்தி வந்த இடத்தை மற்றொரு பிரிவினர் ஆக்கிரமித்து தாக்குதல் மற்றும் மிரட்டலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் நரிக்குறவர் சமூக மக்களுக்காக அரசு சார்பில் இடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் தற்போது 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் வசித்து வரும் பகுதியில் காலியாக இருந்த இடத்தையும் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது அந்த இடத்தை மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நரிக்குறவர்களை தாக்கி துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.