தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் 37 புதிய CCTV கேமராக்கள் – பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் 37 புதிய CCTV கேமராக்கள் – பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தூத்துக்குடி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் காவல்துறை சார்பாக புதிதாக நிறுவப்பட்ட 37 சிசிடிவி கேமராக்கள் மற்றும் PA System ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் இந்த நவீன கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

அதன்படி, பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதிகள், பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் கண்காணிக்கும் வகையில் மொத்தம் 37 புதிய CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்க உயர்திறன் கொண்ட ஆம்பிளிஃபையர் மற்றும் 8 ஹாரன் ஸ்பீக்கர்களுடன் கூடிய PA System அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் ஷேர் ஆட்டோ நிறுத்தம் முதல் கண்ணா சில்க்ஸ் பகுதி வரை இந்த ஒலிபெருக்கி வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த CCTV மற்றும் PA System அமைப்புகள் அனைத்தும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த நவீன CCTV காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக போலீசாரால் கண்காணிக்கப்படுவதுடன், அவசர சூழ்நிலைகளில் உடனடி தகவல் பரிமாற்ற வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், சிக்னல் கோர் டெக்னோ சொல்யூசன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தூத்துக்குடி TMB வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.