40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட புதிய வழித்தடம்: விஇ ரோடு – சண்முகபுரம் – ஜார்ஜ் ரோடு இணைப்பு சாலை மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் பாராட்டு

தூத்துக்குடி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், வாகன போக்குவரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புதிய சாலைகள், மாற்று வழித்தடங்கள் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, விஇ ரோடு – சண்முகபுரம் பெருமாள் தெரு வழியாக ஜார்ஜ் ரோட்டை இணைக்கும் புதிய வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக ‘பணங்காடு’ என அழைக்கப்பட்ட இந்த பகுதி ஒத்தையடி பாதையாக இருந்து வந்ததால், பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு, மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய சாலை திறக்கப்பட்டதையடுத்து, ஜார்ஜ் ரோட்டிலிருந்து சண்முகபுரம் வழியாக விஇ ரோட்டிற்கு பொதுமக்கள் சுற்றி வர வேண்டிய அவசியமின்றி எளிதாக செல்ல முடிகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், மீளவிட்டான் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, அப்பகுதிக்கு நேரில் சென்ற மேயர் ஜெகன் பெரியசாமி, கதிர்வேல் நகரிலிருந்து மீளவிட்டான் மற்றும் மீளவிட்டானிலிருந்து மடத்தூர் செல்லும் புதிய சாலை வழித்தடத்தை கண்டறிந்தார். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் காட்டுப்பகுதிக்குள் இரண்டு மணி நேரம் நடந்து சென்று, சாலை அமைப்பதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு, உடனடியாக சாலை அமைக்கும் பணிகளை தொடங்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம், நகர் பகுதிக்குள் வாகனங்கள் நுழையாமல், புறநகர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையை எளிதில் அடைய முடியும் என்றும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் மேயர் தெரிவித்தார்.

மேலும், சிப்காட் நிறுவனம் மூடி வைத்துள்ள சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதுக்கிராமம் – தாமோதநகர், மீனாட்சிபுரம் – எட்டையாபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து, மீளவிட்டான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை பாராட்டினர்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.