தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து! ரூ.25 கோடி மதிப்பிலான 6,500 பஞ்சு மூட்டைகள் சாம்பல்

தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து! ரூ.25 கோடி மதிப்பிலான 6,500 பஞ்சு மூட்டைகள் சாம்பல்

தூத்துக்குடி பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகே செயல்பட்டு வந்த தனியார் பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான 6,500 பஞ்சு மூட்டைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான் ரோசரி ஆல்பர்ட் ராயனுக்கு சொந்தமான 'எஸ்.ஏ. ராயன் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் குடோனில், மதுரை டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென குடோனில் தீப்பிடித்தது.

பஞ்சு மூட்டைகள் அதிக அளவில் இருந்ததால், தீ சில நிமிடங்களிலேயே குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த சிப்காட், தூத்துக்குடி டவுன் மற்றும் ஸ்டெர்லைட் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

குடோனின் கதவு பகுதி ஜேசிபி இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் சுமார் 6,500 பஞ்சு மூட்டைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானதால் ரூ.25 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.