உப்பு தொழிலை அழிக்க விடமாட்டோம்... மீண்டும் 2018 ஆம் ஆண்டு போல் மக்கள் எழுச்சி! – அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை

உப்பு தொழிலை அழிக்க விடமாட்டோம்... மீண்டும் 2018 ஆம் ஆண்டு போல் மக்கள் எழுச்சி! – அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நடைபெறும் பகுதிகளை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விரைவில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் சிலுவை, கூறுகையில்

முள்ளக்காடு, கோவளம், கோவங்காடு, புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட சிறிய உப்பு உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்தத் தொழிலை நம்பி 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், உப்பு உற்பத்தி நடைபெறும் நிலங்களை கையகப்படுத்தி பன்னாட்டு நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் முயற்சியை மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், "திட்டம் கைவிடப்படாவிட்டால், 2018 ஸ்டெர்லைட் போராட்டத்தைப் போன்று அகிம்சை வழியில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதேபோல், தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் ஸ்ரீநாத் மற்றும் கீர்த்தனா போராட்டத்தில் ஈடுபட்ட உப்பு உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது அதே திட்டத்தை முன்னெடுத்து வருவது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.