தூத்துக்குடியில் நூதன திருவிழா... பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்!
தூத்துக்குடியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு பொதுமக்கள் சீர்வரிசை வழங்கினர்.
தூத்துக்குடியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு பொதுமக்கள் சீர்வரிசை வழங்கினர்.
தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி பகுதி தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை தொடக்கப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கி வருகின்றனர். இதனை விழாவாக அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டியில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை தொடக்கப்பள்ளி ஆண்டு விழா மற்றும் சீர் வரிசை வழங்கும் விழா 6 வது ஆண்டாக நடைபெற்றது. விழாவுக்கு ராஜகோபால்நகர் சேகரம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தாளாளர் ஜெபக்குமார் ஜாலி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா கிரேனா ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு பண்டாரம் பட்டி கிராம மக்களும், முன்னாள் மாணவர்களும் பள்ளிக்கூடத்துக்கு தேவையான நாற்காலிகள், தரை விரிப்புகள், கம்ப்யூட்டர் பிரிண்டருக்கு தேவையான மை, பேப்பர் உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து வழங்கினர். அதனை தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.