முத்தையாபுரம் அருகே நான்காம் வகுப்பு மாணவிக்கு 40 ஆயிரம் கேட்ட தனியார் பள்ளி! – DEO தலையீட்டுக்குப் பிறகு TC வழங்கப்பட்டது!

முத்தையாபுரம் அருகே  நான்காம் வகுப்பு மாணவிக்கு 40 ஆயிரம் கேட்ட தனியார்  பள்ளி! – DEO தலையீட்டுக்குப் பிறகு TC வழங்கப்பட்டது!

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாண்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில்  பள்ளிக் கட்டணமாக ரூ.40 ஆயிரம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத் தொகையை செலுத்த முடியாத நிலையில் இருந்த பெற்றோர், தங்களது குழந்தையை வேறு பள்ளியில் சேர்க்க முடிவு செய்து, பள்ளி நிர்வாகத்திடம் மாற்றுச் சான்றிதழ் (TC) கோரியுள்ளனர்.

ஆனால், பள்ளியின் தலைமை ஆசிரியர் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்ததுடன், பெற்றோர்களை தொடர்ந்து அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பெற்றோர், இந்த பிரச்சினையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறநகர் செயலாளர் தோழர் முனியசாமி அவர்களிடம் எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து, இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்டத் தலைவர் தோழர் மாடசாமி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மாவட்டத் தலைவர் தோழர் நேசமணி ஆகியோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்ததுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், மாவட்ட கல்வி அலுவலர் (DEO) அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி கூறியதையடுத்து, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, நான்காம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கியது.

பெற்றோரின் கோரிக்கைக்கு நீதி கிடைக்க மாணவர் மற்றும் வாலிபர் அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர்களின் கல்வி உரிமையை எந்த காரணத்திற்காகவும் பறிக்கக் கூடாது என்றும்  வலியுறுத்தியுள்ளனர்.