தூத்துக்குடியில் ரோட்டரி விழா: அமைச்சர் ஸ்ரீநாத் ரோட்டரி சங்கத்தின் புதிய உறுப்பினராக இணைந்தார்

தூத்துக்குடியில் ரோட்டரி விழா: அமைச்சர் ஸ்ரீநாத் ரோட்டரி சங்கத்தின் புதிய உறுப்பினராக இணைந்தார்

தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் ரோட்டரி சங்கத்தின் பிரம்மாண்ட விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ரோட்டரி ஆளுநர் தினேஷ் பாபு, ஜோ பிண்டோ வில்லவராயர், ஜோ பிரகாஷ் மற்றும் மகாலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, தொழிலதிபரும் முன்னாள் ரோட்டரி ஆளுநருமான ஜோ சேசையா வில்லவராயர், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்களுக்கு ரோட்டரி சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை வழங்கி, அவரை அதிகாரப்பூர்வமாக ரோட்டரி சங்கத்தில் இணைத்தார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் உரையாற்றிய முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜோ சேசையா வில்லவராயர், ரோட்டரி அமைப்பின் சமூக மற்றும் அரசியல் பங்களிப்பை எடுத்துரைத்தார்.

அவர் பேசுகையில், “தற்போதைய தமிழக சட்டசபையில் மொத்தம் 27 ரோட்டரி உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர். ஏற்கனவே 5 ரோட்டரி உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருந்த நிலையில், தற்போது அமைச்சர் ஸ்ரீநாத் இணைந்ததன் மூலம் தமிழக அமைச்சரவையில் ரோட்டரி உறுப்பினர்களாக உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தற்போதைய சட்டசபையில் சுமார் 10 சதவீதம் ரோட்டரி உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மட்டுமின்றி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.