மது பணம் தர மறுத்த மனைவி மீது கொடூர தாக்குதல்...கல்லால் தலையில் அடித்து கொலை செய்ய முயன்ற கணவர் கைது – தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

மது பணம் தர மறுத்த மனைவி மீது கொடூர தாக்குதல்...கல்லால் தலையில் அடித்து கொலை செய்ய முயன்ற கணவர் கைது – தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் குடும்ப வன்முறையால் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மது அருந்துவதற்குப் பணம் தர மறுத்த மனைவியை, கணவர் கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38), தனியார் செல்போன் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (35). தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன், அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு மீண்டும் மது குடிக்கப் பணம் கேட்டபோது, ஜெயந்தி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டின் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து ஜெயந்தியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

பலத்த காயமடைந்த ஜெயந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தாளமுத்து நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.