விபத்தில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு: நெல்லை நீதிமன்றம் உத்தரவு

விபத்தில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு: நெல்லை நீதிமன்றம் உத்தரவு

விபத்தில் இறந்த தூத்துக்குடி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க நெல்லை நீதிமன்றம்  உத்தரவிட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள மேல தட்டப்பாறை செட்டியூரணி மேல தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் சிவா (வயது 31). இவர் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1.6.2018 அன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. 

இதில் பலத்த காயம் அடைந்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் சிவா இறந்தது குறித்து அவருடைய மனைவி ஸ்ரீபிரியா, மகள் ரக்சிதாஸ்ரீ, மகன் சிவபிரதாப், தந்தை மாரியப்பன், தாயார் ராமலட்சுமி ஆகியோர் ரூ.1 கோடியே 80 லட்சம் நஷ்டஈடு வழங்கக்கோரி, நெல்லை 4-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வக்கீல் ரவீந்திரன் மூலம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நெல்லை நீதிபதி திருமகள், விபத்தில் இறந்த ராணுவ வீரர் சிவாவின் குடும்பத்தினருக்கு பஸ்சின் காப்பீட்டு கழகம் நஷ்டஈடாக ரூ.1 கோடியே 3 லட்சத்து 63 ஆயிரத்து 224-ம், 7.5 சதவீதம் வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.