தூத்துக்குடி - வாஞ்சிமணியாச்சி புதிய சாலைப் பணி : நில உரிமைதாரர்களுக்கு டிச.23ல் இழப்பீட்டு முகாம்!
தூத்துக்குடி முதல் வாஞ்சிமணியாச்சி இரயில் நிலையம் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக வருகிற 23ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்டஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் மேலபாண்டியாபுரம், மணியாச்சி, பாறைக்குட்டம், ஜம்புலிங்கபுரம் மற்றும் சவரிமங்கலம் ஆகிய 5 கிராமங்களில் தூத்துக்குடி முதல் வாஞ்சிமணியாச்சி இரயில் நிலையம் வரை புதிய தார் சாலை (SH-93) அமைக்கும் பணிக்காக தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002)-ன் கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நில உடைமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை முழுமையான ஆவணங்கள் தாக்கல் செய்து நில உரிமையினை நிலைநாட்டாத நிலங்களுக்குரிய இழப்பீட்டு தொகை நாளது தேதி வரை அரசு கணக்கில் இருப்பில் உள்ளது.
எனவே, மேற்கண்ட நில உடைமைதாரர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கும் வகைக்கு மேலபாண்டியாபுரம், மணியாச்சி, பாறைக்குட்டம், ஜம்புலிங்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு 23.12.2025 அன்று காலை 11.00 மணியளவில் மணியாச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், சவரிமங்கலம் கிராமத்திற்கு சவரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ), நெடுஞ்சாலைகள், தூத்துக்குடி அவர்களால் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
நாளது தேதி வரை இழப்பீட்டு தொகை பெற்றுக் கொள்ளாத நில உடைமைதாரர்கள் பட்டா, சிட்டா, பதிவு ஆவணங்கள், வில்லங்க சான்றிதழ் மூல ஆவணங்கள், பட்டாதாரர் காலமாகியிருந்தால் இறப்பு / வாரிசு சான்று உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்து இழப்பீட்டு தொகை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ) நெடுஞ்சாலைகள், தூத்துக்குடி மற்றும் தனி வட்டாட்சியர் (நி.எ), அலகு-2, கோவில்பட்டி ஆகியோரை தொடர்பு கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.