இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி பிரதாபன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் மாரியப்பன், கார்த்திகேயன், செல்வகுமார், ராஜேந்திரகுமார், முனியராஜ், கண்ணன் ஆகியோர் நேற்று அதிகாலை திருச்செந்தூர் ஆலந்தலை கடற்கரை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலந்தலை கடற்கரையில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் ஆட்கள் யாரும் இல்லாமல் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தது.
உடனடியாக அந்த லாரியை சோதனை செய்தபோது வெள்ளை நிற சாக்கு மூடைகளில் பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நடத்திய விசாரணையில், தலா 35 கிலோ எடை கொண்ட 87 பண்டல்கள் என சுமார் 3 டன் பீடி இலைகள் இருந்ததும், இவை அனைத்தும் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து பீடி இலை பண்டல்களுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒப்படைத்தனர். பீடி இலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, அவற்றை இலங்கைக்கு கடத்த முயன்றது யார்? என போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
----------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE