தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் வாலிபர் கொடூர கொலை.. கல்லறை தோட்டத்தில் சடலம் மீட்பு.. போலீஸ் தீவிர விசாரணை

தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் வாலிபர் கொடூர கொலை.. கல்லறை தோட்டத்தில் சடலம் மீட்பு.. போலீஸ் தீவிர விசாரணை

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அருகே உள்ள முல்லை நகர் கல்லறை தோட்டத்தில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து மற்றும் முகப் பகுதியில் பலத்த ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து உடனடியாக தகவல் கிடைக்கவில்லை.

மேலும், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? காதல் தொடர்பான பிரச்சனையா அல்லது மது போதையில் ஏற்பட்ட தகராறா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் ரூரல் டிஎஸ்பி சுதிர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கொலை சம்பவம் அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.