தூத்துக்குடியில் கெட்டுப்போன கேக் விற்பனை... வாடிக்கையாளர்கள் முற்றுகை!

தூத்துக்குடியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்த பேக்கரியை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் கெட்டுப்போன கேக் விற்பனை... வாடிக்கையாளர்கள் முற்றுகை!
தூத்துக்குடியில் கெட்டுப்போன கேக் விற்பனை... வாடிக்கையாளர்கள் முற்றுகை!

தூத்துக்குடியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்த பேக்கரியை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சென்னையில் இறும்புக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சிவக்குமாரின் இளைய சகோதரர் சிவராமனுக்கு  திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக சாத்தான்குளம் தங்கையா ஸ்வீட்ஸ் &பேக்கரியில் கேக் வாங்கியுள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அந்த கேக்கை வெட்டிய போது, அது பூஞ்சை பிடித்து கெட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதனால், திருமண வீட்டை சேர்ந்தவர்கள் தங்கையா ஸ்வீட்ஸ்& பேக்கரியில் சென்று கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்துள்ளீர்கள் என கடை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாகி திருமண வீட்டைச் சேர்ந்தவர்கள் கடையில் வேலை செய்த 2 இளைஞர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கையா கடை முன்பு குவிந்தனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், சாத்தான்குளம் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் ஸ்வீட்ஸ் பேக்கரி கடைகளை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் முறையான ஆய்வு செய்து காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.