தூத்துக்குடியில் ஹோட்டல் கழிவு நீர் சாலையில் தேங்கி சுகாதர கேடு: மாணவிகள், பொதுமக்கள் அவதி!

தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதால், பொதுமக்கள், பள்ளி மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி விஇ ரோடு, ஸ்மார்ட் சிட்டி சாலையில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளியின் வடக்கு வாசல் அமைந்துள்ளது. இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆட்டோ, சைக்கிளில் ஏராளமானோர் வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பள்ளியின் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வாகனங்கள் வேகமாக வரும்போது ஒதுங்க இடமில்லாமல் பள்ளி குழந்தைகள் மீது கழிவு நீர் தெறித்து உடைகள் நாசமாகின்றன. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.