மீனவர் சமூகத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் ரவீந்திரன் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிப்பு: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பரதர் நல சங்கம் நன்றி

மீனவர் சமூகத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் ரவீந்திரன் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிப்பு: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பரதர் நல சங்கம் நன்றி

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நெல்லை மாவட்டம் கூத்தங்குளி பகுதியை பூர்வீகமாக கொண்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பரதர் நல சங்க நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முத்துக்குளித்துறை பரதர் நல சங்க பொதுச் செயலாளர் ராஜு கூறுகையில், கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற எங்கள் சங்க மாநாட்டில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த பரதர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டதாக தெரிவித்தார். அந்த மாநாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் எங்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

இதன் தொடர்ச்சியாக 22ஆம் தேதி திமுக தலைமை சார்பில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற சந்திப்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன், நகரச் செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது எங்கள் சங்க தீர்மானத்தின் நகலை திமுக நிர்வாகிகளிடம் வழங்கி, அதை தமிழக முதலமைச்சரிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டோம். அதன் அடிப்படையில் தற்போது திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக எங்கள் சமூகத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கும் பரதர் நல சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், மீனவர் சமுதாய மக்கள் என்றும் திமுகவுக்கு ஆதரவாக இருப்போம் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் சங்க தலைவர் கனகராஜ், பொதுச் செயலாளர் ராஜு, பொருளாளர் மிக்கேல், அவைத்தலைவர் ஜான்சன் டல்மோதா, மெரின்டோ, துணைத் தலைவர் ராஜா, பிச்சையா, துணைச் செயலாளர் சசி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.