குலசை தசரா திருவிழாவில் நடந்த பயங்கர கொலை வழக்கு! 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

குலசை தசரா திருவிழாவில் நடந்த பயங்கர கொலை வழக்கு! 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு உலுக்கிய தசரா திருவிழா கொலை வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

முத்தையாபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (40) என்பவர் கொத்தனார் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது சித்தப்பா கொலை செய்யப்பட்ட வழக்கில் மாரிசாமி மற்றும் அவரது நண்பர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது. ஆனால் அந்த வழக்கில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனவருத்தத்தில் இருந்த முருகேசன், தனது சித்தப்பாவின் மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி முத்தையாபுரம் ராஜீவ் நகர் பகுதியில் தசரா திருவிழா நடைபெற்றபோது, மாரிசாமியை முருகேசன் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில் மாரிசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் முருகேசனை துரத்திச் சென்றனர்.

ராஜீவ் நகர் 7-வது தெருவில் முருகேசனை சுற்றிவளைத்த அவர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கற்களால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அப்போது முத்தையாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், முதன்மை குற்றவாளிகளான முத்தையாபுரத்தைச் சேர்ந்த மாரிசாமி (44), அவரது சகோதரர் சரவணன் (35) மற்றும் மூக்காண்டி (39) ஆகிய மூவரும் குற்றவாளிகள் என அறிவித்து, ஒவ்வொருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் தொடர்புடைய மற்ற இருவர் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

6 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு, முத்தையாபுரம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.