விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மகன் மீது தூத்துக்குடி ஆட்சியரிடம் தம்பதி அதிரடி புகார்..!

விளாத்திகுளம் அதிமுக எம்.எல்.ஏ சின்னப்பன் மகன் சுமார் 2.5 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து கிரையம் செய்துள்ளதாக பாதிக்கபட்ட நபர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜவகர்லால் நேரு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கீழ விளாத்திகுளம் கிராமத்தில் புல எண் : 525/2B2,525/3B2,-ல் சுமார் 2.5 ஏக்கர் புஞ்சை விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தை நான் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது நான் எழுதிக்கொடுத்துள்ளதாக கூறி இறந்துபோன எனது தந்தை சுப்பா ரெட்டியாரை வைத்து 15.10.2009 தேதியில் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த அருணாச்சல ரெட்டியார் என்பவரது மகன் சரவணன் என்பவருக்கு போலியாக பவர் கொடுத்து அவர் மேற்படி சுப்பா ரெட்டியார் 15.10.2009ல் இறந்து விட்டதை மறைந்து போலியான Life certificate ஒன்றை உற்பத்தி செய்து சுமார் 12 ஆண்டுகள் கழித்து 28.08.2020 அன்று சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகனான ராஜாமணி என்பவருக்கு போலியாக கிரைய பத்திரம் பதிவு செய்திருப்பதையும் ராஜாமணி யிடமிருந்து 18.08.2022 அன்று அ.தி.மு.க முன்னாள் MLA சின்னப்பன் மகன் பிரித்விகுமார் என்பவருக்கு மோசடியாக கிரைய பத்திரம் ஒன்றை பதிவு செய்து கொடுத்துள்ளது வில்லங்க சான்று எடுத்து பார்க்கும் போது தெரிய வந்தது.
எனவே இது தொடர்பாக இதற்கு முன்பு மனு அளித்து உள்ளேன். இது வரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ள படவில்லை.
எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆள் மாறாட்டம் செய்து போலியாக பத்திரம் பதிவு செய்தும், இறந்து போனவருக்கு life certificate உற்பத்தி செய்தும் எனக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொண்ட , சரவணன், ராஜாமணி, மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் மகன் பிரித்விகுமார் ஆகியோர்கள் மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுத்து மேற்படி போலி ஆவணங்களை ரத்து செய்ய நிலத்தை மீட்டு தர வேண்டும் என கூறியுள்ளார்.