பணியில் இருக்கும் போது விபத்தில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை செலுத்தவில்லை : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மீது தமிழக முதல்வரிடம் புகார்!

பணியில் இருக்கும் போது விபத்தில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை செலுத்தவில்லை : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மீது தமிழக முதல்வரிடம் புகார்!

தூத்துக்குடியில் பணியில் இருக்கும் போது விபத்தில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் அரசு மரியாதை செலுத்த வில்லை என்று தமிழக முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக முதல்வருக்கு தமிழக ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச் சங்கம் மாவட்ட செயல் தலைவர் த.ராஜூ அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி தெர்மல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக சுப்பையா என்பவர் பணிபுரிந்து வருகிறார். 

அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு தலை காயத்துடன் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள் நோயாளியாக இருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று 19.1.2026 இறந்து பிரேத பரிசோதனைக்கு பின்பு தூத்துக்குடி மின் மயானத்தில் நல்லடக்கம் செய்யபட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகம் அரசு விதிகள் படி பணியில் இருக்கும் காவல்துறையினர் இறந்தால் அரசு செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகம் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை பணியை செய்யாமல் இருப்பது, மாவட்ட அனைத்து பணியில் இருக்கும் மற்றும் காவல்துறையில் ஓய்வு பெற்ற அனைத்து காவல்துறையினர் குடும்பங்கள் மன வேதனைக்கு உள்ளாகி உள்ளோம்.  இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை செலுத்தாத தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த செயலை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வரும் சட்ட மன்ற தேர்தல் பணிக்கு அழைத்தால் ஓய்வு பெற்ற காவல் துறையினர் யாரும் செல்ல கூடாது என முடிவு எடுத்து எங்களுடைய உணர்வுபூர்வமான எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.