காசோலை மோசடி வழக்கு : தம்பதிக்கு 6 மாதம் சிறை விதித்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றம் தீா்ப்பு!!
காசோலை மோசடி வழக்கு : தம்பதிக்கு 6 மாதம் சிறை விதித்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றம் தீா்ப்பு!!
காசோலை மோசடி வழக்கில் தம்பதிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் வேலாயுதம்(55). இவா் கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சோ்ந்த ராமசுப்பு மனைவி லதாவுக்கு 3 தவணையாக ரூ.38.5 லட்சம் வங்கி பரிவா்த்தனை மூலம் கடனாக வழங்கினாராம். அவரது கணவா் ராமசுப்புவுக்கும் ரூ.20 லட்சம் ரொக்கக் கடன் வழங்கினாராம். லதா பெற்ற கடனுக்கு இரு தவணையாக முறையே ரூ.25 லட்சம், ரூ.13 லட்சம் காசோலையாக திருப்பி செலுத்தினாராம்.
அவரது கணவா் ஒரே தவணையாக ரூ.20 லட்சத்துக்கு காசோலை வழங்கினாராம். ஆனால், தம்பதியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்பிவந்தனவாம். இதுகுறித்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் வேலாயுதம் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற நடுவா் முகமது சாதிக் உசேன் விசாரித்து தம்பதிக்கு தலா 6 மாத சிறை தண்டனையும், கடன் தொகையை ஒரு மாதத்துக்குள் செலுத்தாவிட்டால் மேலும் ஒரு மாத சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தார்.