நெல்லை அருகே அரசு பஸ் கண்டக்டரை கட்டிப்போட்டு 50 பவுன் நகை கொள்ளை : தூத்துக்குடியை சேர்ந்த 2பேர் கைது..!
நெல்லை அருகே அரசு பஸ் கண்டக்டரை கட்டிப்போட்டு 50 பவுன் நகை கொள்ளை : தூத்துக்குடியை சேர்ந்த 2பேர் கைது..!
நெல்லையில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 2பேர் தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கி கைதாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையை அடுத்த வி.எம்.சத்திரம் ஜான்சி ராணி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (44). இவர் தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ராமசாமி அவரது மகள், மகன் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கும்பல் ராமசாமி வீட்டிற்குள் புகுந்து வீட்டில் கிடந்த துணிகளை கொண்டு ராமசாமி மற்றும் அவரது குழந்தைகளை கட்டிப்போட்டனர். பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 50 பவுன் நகை, விலை உயர்ந்த செல்போன்கள், மற்றும் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துள்ளனர். அந்த நேரத்தில் வனிதா வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர் வருவதை அறிந்த கொள்ளையர்கள் 5 பேரும் நகை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாசல் வழியாக தப்பி சென்றுவிட்டனர். வீட்டிற்குள் வந்த வனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகள் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களது கட்டுகளை அவிழ்த்து விட்டார். உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்த ராமசாமி கொள்ளையர்களை தேடி உள்ளாா். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து தூத்துக்குடி சாலையில் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் மற்றும் சரவணக்குமாா் ஆகியோா் தலைமையில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் கலைந்து கிடந்த பொருட்களை தடயவியல் துறையினர் சோதனை செய்தனர். தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள புதுபாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு போலீசார் விரைந்து சென்று 2 வாலிபர்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிகிச்சை பெற்று வரும் 2 வாலிபர்களும் தூத்துக்குடி லயன்ஸ்டோன் பகுதியை சேர்ந்த முத்து, சிலுவை என்பது தெரியவந்தது.
ஆனால் அவர்கள் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்ததால் அவர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் விபத்தில் சிக்கிய சிலுவையும், முத்துவும் தனது கூட்டாளிகள் 3 பேருடன் பாளை வி.எம். சத்திரத்தில் ராமசாமி வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் யாரிடமும் சிக்காமல் தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தனிப்படை போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். சிகிச்சை பெற்று வரும் முத்து, சிலுவை ஆகியோரிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சக கூட்டாளிகள் 3 பேர் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? கொள்ளையடித்த பொருட்கள் எங்கே? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
+++++++++++++++++++++++++++++++++++++
தூத்துக்குடி விஷன் நியூஸ் இனையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் இடம்பெற..
செல்: +91 8524887507
எங்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இனைய..