குளத்தில் மூழ்கி நண்பர்கள் இருவர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
தூத்துக்குடி அருகே குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி நண்பர்கள் 2பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி சின்ன கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி (25), கீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் எசுவடியான் (25), மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவளை கிராமத்தில் சுடலைமாடசாமி கோவில் அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது மலைச்சாமி மற்றும் எசுவடியான் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்குள் சென்றதால் சகதியில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏரல் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று 2 பேர் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் மூழ்கி நண்பர்கள் 2பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.