கோவில்பட்டியில் துணிகரம் - தொழிலதிபர் வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் நகை கொள்ளை - வெளியூர் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை!

கோவில்பட்டியில் துணிகரம் - தொழிலதிபர் வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் நகை கொள்ளை - வெளியூர் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ்நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (62). தொழிலதிபரான இவர், மதுரையில் ஓட்டல் வைத்திருந்தார். இவரது மனைவி அருள்மணி. இவர்களது மகன் கார்த்திக் (40). தேனியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கார்த்திக் தேனியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வருவதால் சந்திரமோகனும், அவரது மனைவியும் மட்டும் கோவில்பட்டி கணேஷ்நகரில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 27ம்தேதி மகனை பார்ப்பதற்காக சந்திரமோகனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு தேனிக்கு சென்றனர். வீட்டு வளாகத்தில் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு அதேபகுதியைச் சேர்ந்த வாட்சுமேன் நடராஜன் என்பவர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றி வந்தார். 

இந்நிலையில் அவர், நேற்று தண்ணீர் ஊற்ற வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு காம்பவுன்ட் கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 

இதுகுறித்து நடராஜன், தேனியில் உள்ள தொழிலதிபர் சந்திரமோகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர், உடனடியாக புறப்பட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 62 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பட்டுசேலைகள் உள்ளிட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சந்திரமோகன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட நபர்கள், இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நிருபர் கோவில்பட்டி 

S.முத்துக்குமார்