விளாத்திகுளம் மாணவி கொலை : "அதிர்ச்சி திருப்பம்! நகத்தில் கிடைத்த சதை மூலம் வெளிச்சத்துக்கு வந்த கொலை ரகசியம்

விளாத்திகுளம் மாணவி கொலை : "அதிர்ச்சி திருப்பம்! நகத்தில் கிடைத்த சதை மூலம் வெளிச்சத்துக்கு வந்த கொலை ரகசியம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி காணாமல் போன நிலையில், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் தீவிரமாக தேடினர். தொடர்ந்து 11ஆம் தேதி அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மாணவி உடல் பல்வேறு காயங்களுடன், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அறிகுறிகளுடன் சடலமாக மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள், வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கிராமம் முழுவதும் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டது.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காற்றாலை அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவ தினத்தில் சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனம் அங்கு இருந்தது கண்டறியப்பட்டது. அதன் பதிவு எண் மூலம் விசாரணை மேற்கொண்டதில், அந்த வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து திருடப்பட்டதாக தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அந்த வாகனத்தை திருடி கொண்டு வந்த நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

மேலும், இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் முடிவுகளும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், மாணவியின் நகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சதைத் துகள்களின் டிஎன்ஏ ஆய்வு மற்றும் சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல் ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், சம்பவம் நடந்த இடத்திற்கு முனீஸ்வரன் இருசக்கர வாகனத்தில் வந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் பார்த்திபனூரில் இருந்து வாகனம் திருடி வந்ததும் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியதில், மாணவியின் நகத்தில் கிடைத்த சதையுடன் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தர்ம முனீஸ்வரன் கடந்த 2020ஆம் ஆண்டு எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டி மீது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் யாரேனும் உதவி செய்தார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.