தூத்துக்குடியை உலுக்கிய மாணவி கொலை.. குற்றவாளிக்கு டபுள் தூக்கு

தூத்துக்குடியை உலுக்கிய மாணவி கொலை.. குற்றவாளிக்கு டபுள் தூக்கு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் 11-ம் தேதி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரனை போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ப்ரீத்தா அறிவித்திருந்தார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்ம முனிஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

விசாரணையின் போது குற்றம் தொடர்பாக ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா என நீதிபதி கேட்டபோதும், தர்ம முனிஸ்வரன் எதுவும் பேசவில்லை. பின்னர் அவனை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ப்ரீத்தா, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக இரட்டை தூக்கு தண்டனையும், உடலில் பலத்த காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.