நாங்கள் வம்பு சண்டைக்கு போகமாட்டோம், ஆனால் வந்த சண்டையை விடமாட்டோம்: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு!!

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா-2025, மாநில உரிமையின் போராளி! மாதரை காக்கும் கொடையாளி!! என்ற தலைப்பில் சென்னை எழும்பூரில் உள்ள பயாஸ் மஹாலில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு மகளிரணியினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: முதலமைச்சரின் பிறந்தநாளை மகிழ்வுடனும், பெருமையுடனும் கொண்டாடி வருகின்றோம். முதலமைச்சரின் பிறந்தநாள் செய்தி இரண்டு தான். நம்முடைய மண்ணின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில், நம்முடைய மொழியைப் பாதுகாக்க வேண்டும், நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதுதான் முதலமைச்சருடைய பிறந்தநாள் செய்தியாக இருக்கிறது.
ஏன் இன்னும் மொழியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? தேர்தல் வருகிறது என்ற காரணத்திற்காக மொழி மற்றும் மாநில உரிமையைப் பற்றிப் பேசுகிறீர்களா? என்று கேட்கிறார்கள். நான் திரும்ப திரும்ப சொல்லக்கூடிய பதில், வரக்கூடிய தேர்தல் சட்டமன்றத் தேர்தல். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறவில்லை, ஒரு மலர் கூட தமிழகத்தில் மலர வில்லை. அதனால், சட்டமன்றத் தேர்தலில் உங்களைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.
இப்படியான சூழலில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வேலையே இல்லை. உங்களைப்பற்றி மக்களிடம் பேசி, உங்களுக்கு முக்கியத்துவம் தருவதற்கு எந்த அவசியமும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இல்லை. ஆனாலும், முதலமைச்சர் ஒன்றிய பாஜக அரசாங்கத்தைப் பற்றி, அவர்களுடைய அதிகாரப் போக்கைப் பற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறார். ஏனென்றால், பேசுகின்ற கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
நாங்கள் வம்பு சண்டைக்கு போகமாட்டோம், ஆனால் வந்த சண்டையை விடமாட்டோம். ஒரு புதிய கல்விகளைக் கொண்டு வந்து பிரச்சனையை உருவாக்குகிறீர்கள். மிக முக்கியமான ஒன்று, மும்மொழி கொள்கை. தமிழ்நாட்டில் ஆங்கிலமும், தாய்மொழி தமிழும் படிக்கிறோம். மேலும், யாரும் யாரையும் இந்த மொழியைத்தான் படிக்க வேண்டும் என கட்டுப்படுத்தவில்லை. ஆனால், இரண்டு மொழி கொள்கை இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் நீங்கள் மூன்று மொழி கட்டாயம் என்று தணிக்கும் போது தான் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்க்கிறார்.
இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நீங்கள் மும்மொழி கொள்கையை ஏத்துக்கிட்டு கையெழுத்துப் போடவில்லை என்றால் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்துவேன் என்று சொல்கிறீர்கள். அந்த நிதி தமிழ்நாட்டிலிருந்து வரிப்பணத்தில், மக்களின் உழைப்பில் வந்திருக்கக்கூடிய பணம். தமிழ்நாட்டு மக்கள் அவர்களுடைய ரத்தத்தையும், வேர்வையும் சிந்தி உருவாக்கித் தந்த பணத்தில், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தின் கல்விக்கான நிதியைத் தர மாட்டேன் என்ற மிரட்டலை எங்களை நோக்கி வைக்கிறீர்கள்.
Black-Mail (பிளாக் மெயில்) பண்ணறது நாங்கள் இல்லை, நீங்கள் தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம், நாங்கள் பெரியாரின், கலைஞரின் பிள்ளைகள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
I am from the Dravidian stock என்று பாராளுமன்றத்தின் முழங்கிய பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள். அதனால், நீங்க எதை சொன்னாலும் பரவாயில்லை. கூழைக் கும்பிடு போட்டு, பயந்து நடுங்கக் கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாரும் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக கலைஞருக்குப் பின்னால் பொறுப்பேற்றக்கூடிய முதலமைச்சர் எப்படி நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக் கொடுப்பார். அதனால் தான் எதிர்த்துப் பேச வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் உள்ளோம்.
கொரோனா பெரும் தோற்று காலத்தின் போது, லட்சக்கணக்கான மக்கள் தென் மாநிலம் இருந்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, பீகார் மாநிலங்களுக்கு நடந்து போகக்கூடிய துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டார்கள். எத்தனை லட்சம் பேர் தமிழ்நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வட மாநிலத்தில் இருக்கக்கூடியவர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தால் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.
நியாயமாக பார்த்தால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மொழிகளை நீங்கள் சொல்லித் தர வேண்டும். அவர்கள் இங்கே வந்து கடைக்குப் போகும்போது, மருத்துவமனைக்குப் போகும்போது, பள்ளி கூடத்திற்குப் போகும்போது எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலத்திற்கு மருத்துவர்களாக, ஐஏஎஸ், ஐபிஎஸ், மக்களோடு பணியாற்றக் கூடியவர்களாக, வேலைக்கு வரும்போது அவர்கள் இந்தியை கற்றுக் கொள்வார்கள். நான் பல வருடங்களாக நாடாளுமன்றத்தில் எம்.பியாக இருக்கினறேன். ஆனால், எனக்கு இந்தி தெரியாது. எனக்கு இந்தியைக் கற்றுக்கொள்ள ஆர்வமும் இல்லை.
தமிழ்நாட்டிலிருந்து இன்றைக்கு உலகம் முழுவதும் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக சென்று வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால், தமிழ்நாடு கல்வியில் முன்னேறி இருக்கிறது.
நீங்கள் 30 வருஷத்துக்குப் பிறகு எட்டவேண்டிய இலக்கை, தமிழ்நாடு தற்போது தொட்டுவிட்டோம். அதனால், எங்கள் பிள்ளைகள் இரண்டு மொழி படித்தால் போதும். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும், உலகத்தோடு பழகுவதிற்கு. நாம் யார் என்று புரிந்து கொள்ள, தமிழைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் முதலமைச்சர் சொல்கிறார்கள்.
நீங்கள் பத்தாயிரம் கோடி கொடுக்க முடியாது என்று சொன்னாலும் பரவில்லை. எங்கள் பிள்ளைகள் நீங்கள் சொல்வதற்கு அடிபணிய மாட்டார்கள். இதுதான் முதலமைச்சர் நமக்குத் தரக்கூடிய பிறந்தநாள் செய்தி.
அதேபோல், தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஏன் பேசவேண்டும்? எங்களுக்கு என்ன எதிர்ப்பு என்று சொன்னால் தான் உங்களுக்குப் புரியும், உங்களுக்கு மெதுவாகத் தான் புரியும். இப்போது பேசினால் தான், உங்களுக்கு சரியான நேரத்திற்கும் எங்களுடைய உணர்வுகள் புரியும்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்றால், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இன்னும் மக்கள் தொகை கட்டுப்படுத்தவில்லை. இப்படிப்பட்ட சூழலில் நாம் நம்முடைய உரிமைகளுக்காக இன்றிலிருந்து போராடினால் தான் தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரும் போது ஒரு நியாயத்தை உருவாக்க முடியும். இப்பொழுது நமக்குத் தேவைப்படும் பணத்தை ஒன்றிய அரசு தருவதில்லை.
நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் தருகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக கொடுக்கிறார்கள். இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில், நம்முடைய பிரதிநிதிகளை நாடாளுமன்றத்தில் குறைந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் நம்முடைய முதலமைச்சர் இந்த போராட்டத்தை, தனது பிறந்தநாள் நேரத்திலே நாட்டிற்கான செய்தியாகத் தந்து இருக்கிறார்.
அந்த செய்தியை நாம் ஒரு போராட்டமாக எடுத்து நமக்கான உரிமைகளை, நம்முடைய மொழியை நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதுதான் நாம் தரக்கூடிய மிகப்பெரிய பிறந்தநாள் பரிசாக இருக்கும். பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர், திராவிட இயக்கத்தின் போராளிகள் அத்தனை பேருக்கும் மக்கள் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை. நம்முடைய உரிமைகளைக் காக்க தொடர்ந்து போராடுவோம் என்று பேசினார்.
இந்நிகழ்வில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், சென்னை மேயர் மாநகராட்சி பிரியா ராஜன், திமுக மகளிரணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, சென்னை கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா தீனதயாளன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.