திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவில் 44 பவுன் தங்க நகைகள்: 18 பேரின் செல்போன்கள் திருட்டு!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவில் 44 பவுன் தங்க நகைகள்: 18 பேரின் செல்போன்கள் திருட்டு!

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை செயல் அலுவலர் உள்பட 5 பக்தர்களிடம் சுமார் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகள் என சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் குடமுழுக்கு சிறப்பு பணிக்காக கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு பகுதியைச் சேர்ந்த அறநிலையத்துறை செயல் அலுவலர் கவிதா, திருச்செந்தூர் கோயில் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அவர் திங்கள்கிழமை அதிகாலை யாகசாலை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது. 

அதேபோல கோயில் கடற்கரையில் குடமுழுக்கை பார்ப்பதற்கு நின்றிருந்த திருச்சி, புத்தூர் பகுதியைச் சேர்ந்த மனோகர் மனைவி மீனா (60) கழுத்தில் அணிந்திருந்த 20 பவுன் தங்கச் சங்கிலி, தென்காசி மாவட்டம், பாலமார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மனைவி செல்லக்குட்டி (61) அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, 

சங்கரன்கோவில் வீரிருப்பு பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் மனைவி கோமதி (72) அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் திருநெல்வேலி மாவட்டம், வடுகச்சிமதிலைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி சண்முகசுந்தரி (50) அணிந்திருந்த இரண்டே கால் பவுன் தங்கச் சங்கிலி என 5 பேர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 44 பவுன் தங்கச் சங்கிலிகள் காணாமல் போனதாக திருக்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதே போல 18 பேர் தங்களது செல்போன்களை காணவில்லை எனவும் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.