கோவில்பட்டியில் பள்ளியை பூட்டி குழந்தைகளுடன் பெற்றோா் போராட்டம்!!
கோவில்பட்டி அருகே உள்ள கிளவிபட்டியில் பள்ளி கழிவறையை மாணவா், மாணவிகளை சுத்தம் செய்யக் கூறியதைக் கண்டித்து அப்பள்ளியை பூட்டி குழந்தைகளுடன் பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி அருகே உள்ள கிளவிபட்டியில் பள்ளி கழிவறையை மாணவா், மாணவிகளை சுத்தம் செய்யக் கூறியதைக் கண்டித்து அப்பள்ளியை பூட்டி குழந்தைகளுடன் பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கிளவிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 14 மாணவா்கள், 16 மாணவிகள் என மொத்தம் 30 பேர் பயின்று வருகின்றனா். தலைமையாசிரியை உள்பட 6 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இப்பள்ளியில் உள்ள ஆசிரிய, ஆசிரியைகள் பயன்படுத்தும் இரு கழிப்பறைகளையும் மாணவா், மாணவிகளை சுத்தம் செய்யக் கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோா், ஆசிரியா்களிடம் முறையிட்டும் எவ்வித பதிலும் இல்லாததையடுத்து, கிளவிபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மாள், துணைத் தலைவா் பாா்த்தீபன், வழக்குரைஞா்கள் சிவபெருமாள், பரத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன் ஆகியோா் முன்னிலையில், அப்பள்ளி மாணவா், மாணவிகள், பெற்றோா் பள்ளியை பூட்டி, ஆசிரியா்களின் செயல்பாட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், பள்ளிக்கு பணிக்கு வந்த ஆசிரியா்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. தகவலறிந்தவுடன் நாலாட்டின்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சின்னராசு, வட்டாரக் கல்வி அலுவலா் பத்மாவதி, வட்டாட்சியா் சுசிலா, வருவாய் ஆய்வாளா் ராஜசேகா் ஆகியோா் பள்ளிக்குச் சென்று, போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, தலைமையாசிரியை நீலா ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியா்கள், மாணவா், மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பிற்பகலில் மாணவா், மாணவிகளை பெற்றோா் வழக்கம்போல பள்ளிக்கு அனுப்பினா்.