தூத்துக்குடி அருகே கருப்பு நிற முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!!
தூத்துக்குடி அருகே குமாரகிரி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுப்பாடு கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் வ.உ.சிதம்பரம் கல்லூரி வரலாற்று துறையின் முன்னாள் முனைவர் பட்ட ஆய்வாளர் மா.ஆறுமுக மாசான சுடலை என்பவர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆடுகளை மேய்க்க வருவதைக் கண்டார்.
தூத்துக்குடி அருகே குமாரகிரி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுப்பாடு கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் வ.உ.சிதம்பரம் கல்லூரி வரலாற்று துறையின் முன்னாள் முனைவர் பட்ட ஆய்வாளர் மா.ஆறுமுக மாசான சுடலை என்பவர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆடுகளை மேய்க்க வருவதைக் கண்டார்.
இந்த மலைக்கு அருகில் அருள்மிகு.வெங்கலமணி அய்யனார் என்ற சாஸ்தா கோவில் உள்ளது. இம்மலையானது உப்பாறு ஓடையின் தென்முனையில் அமைந்துள்ளது. இம்மலையில் செம்மண் சரள்மண் மற்றும் கற்கள் வெடி வைத்து தகர்த்தப்பட்டு அதிகமாக அள்ளப் பட்டுள்ளது. இதனால் இங்கு பல்வேறு முதுமக்கள் தாழிகள் சேதமடைந்தும், அழிக்கப்பட்டும் உள்ளது. ஆய்வாளர் தன்னுடைய ஆய்வில் சிவப்பு நிறத்தாலான முதுமக்கள் தாழிகள், கோப்பைகள், இரும்பு கழிவுகள், பாறையின் மீது உருகிய நிலையில் இரும்பின் கழிவுகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
இதுகுறித்து மா.ஆறுமுக மாசான சுடலை கூறுகையில், முதுமக்கள் தாழிகள் பெரும்பாலும் பெருங் கற்காலத்தைச் சேர்ந்தவை ஆகும். இதுவரை தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் பெரும்பாலும் சிவப்பு நிறத்தாலான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இங்கு என்னுடைய ஆய்வில் சிவப்பு நிறத்தாலான பல முதுமக்கள் தாழிகளையும், கருப்பு நிறத்தில் ஒரு முதுமக்கள் தாழி இருப்பதைக் கண்டேன். இரும்பு உருக்காலை இருந்ததற்கான அடையாளமாக உருக்கிய இரும்பின் கழிவுகள் தனியாகவும், பாறைகளின் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன.
மேலும் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கோப்பைகள் இருப்பதைக் கண்டேன். கோப்பைகள் பெரும்பாலும் பழைய கற்காலத்தைச் சேர்ந்தவை என்று ஆய்வாளர் பெட்னாரிக் அவர்களுடைய ஆய்வின் மூலம் அறியமுடிகிறது. இந்த அரிதான முதுமக்கள் தாழியை நான் ஆய்வு மேற்கொண்ட கல்லூரியில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாத்தால் இனி ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு முன்னுதாரனமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் அமையும் என்றார்.
இதுகுறித்து வ.உ.சிதம்பரம் கல்லூரி வரலாற்று துறைத்தலைவர் பா.தருமர் கூறுகையில், இதுவரை தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் பெரும்பாலும் சிவப்பு நிறத்தாலான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ஆகையால் இந்த அரிதான கருப்பு நிறத்தில் இருக்கும் முதுமக்கள் தாழியைப் பாதுகாக்க தொல்லியல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து கி.சசிகலா கூறுகையில், என்னுடைய வழிகாட்டுதலில் முனைவர் மா.ஆறுமுக மாசான சுடலை என்பவர் இதற்கு முன்பு வரை மூன்று புதிய தொல்லியல் களங்களையும், பல்வேறு தொல்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளார்.இவர் கண்டுபிடித்த இடங்களில் தொல்லியல் துறை தகுந்த ஆய்வு மேற்கொண்டு அகழாய்வு செய்து பல்வேறு புதிய வரலாற்றை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.