பொருநை நாகரிகத்தின் அடையாளமான ‘ஆத்தூர் வெற்றிலை’: விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு

பொருநை நாகரிகத்தின் அடையாளமான ‘ஆத்தூர் வெற்றிலை’: விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில், பொருநை நாகரிகத்தின் வாழும் அடையாளமாகவும், உலகளவில் புவிசார் குறியீடு (GI Tag) பெற்ற பெருமைக்குரியதாகவும் விளங்கும் ஆத்தூர் வெற்றிலையின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில், ‘Roots of Porunai’ ஆவணக் குழுவின் சிறப்பு விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆத்தூர் வெற்றிலையின் வரலாறு, விவசாயிகளின் வாழ்வியல் மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து கள ஆய்வுகள் மேற்கொண்டு வந்த ‘Roots of Porunai’ குழுவின் முதல் கட்ட முயற்சியாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை மேலாத்தூர் தொழிலதிபர் திரு. டி. சந்திரசேகர் நாடார் (உதயஸ்ரீ சபரீசன் எண்டர்பிரைசஸ், சென்னை) வெளியிட்டார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கம் சிறப்பாக ஒருங்கிணைத்தது.

விழாவில் ஆவணக் குழுவினர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர். பொருநை நதிக்கரை மற்றும் ஆத்தூர் வெற்றிலை கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் மாநில அளவிலான புகைப்படம் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், “திரைகடல் வியந்த திரையலை தேடி” என்ற தலைப்பில் உருவாகி வரும் ஆவணப்படத்தின் முன்னோட்டமும், உயர்தர காஃபி டேபிள் புத்தகமும் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆத்தூர் வெற்றிலை மரபை பரவலாக எடுத்துச் செல்லும் முயற்சியாக, இந்தப் புத்தகம் தமிழகம் முழுவதும் உள்ள 8,000 பள்ளிகள் மற்றும் பொது நூலகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘Patron Scheme’ எனப்படும் புரவலர் திட்டத்தின் மூலம் நிதி திரட்டும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வேளாண் மரபுகளை பாதுகாக்கும் இந்த அறிவுசார் முயற்சிக்கு பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என ‘Roots of Porunai’ ஆவணக் குழுவினரும், வெற்றிலை விவசாயிகள் சங்கத்தினரும் கேட்டுக்கொண்டனர்.