“பாரத் மக்கள் முற்போக்கு முன்னணி தொடக்கம்: கீதா ஜீவனுக்கு முழு ஆதரவு அறிவிப்பு!”

“பாரத் மக்கள் முற்போக்கு முன்னணி தொடக்கம்: கீதா ஜீவனுக்கு முழு ஆதரவு அறிவிப்பு!”

தூத்துக்குடி: தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்தை நோக்கி “பாரத் மக்கள் முற்போக்கு முன்னணி கழகம்” என்ற புதிய கட்சி தூத்துக்குடி முனியசாமிபுரம் 2வது தெருவில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இந்த விழாவில் கட்சியின் கொடியாக கருப்பு, மஞ்சள், பச்சை நிறங்களைக் கொண்ட மூவர்ணக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி நல்லையா, “தமிழகத்தில் சாதி பெயரில் நடைபெறும் வன்முறைகள் மற்றும் அநீதிகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

“பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். கௌரவக் கொலைகளை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இளைஞர்கள் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும். காதல் திருமணங்களுக்கு எமது கட்சி ஆதரவாக இருக்கும்” என்றார்.

அவர் தொடர்ந்து,

“தமிழன் என்ற அடையாளம் போதுமானது; சாதி அடையாளம் தேவையில்லை. அனைவரும் சமம் என்ற கொள்கையுடன் எமது கட்சி செயல்படும்” என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாநில தலைவர் எம். ராஜ், பொருளாளர் துர்கா தேவி, தென்காசி மாவட்ட செயலாளர் ராஜ், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ், நெல்லை மாவட்ட செயலாளர் என். நம்பிராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எம். விநாயகம், மாவட்ட துணை செயலாளர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு, தூத்துக்குடி திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு வாக்குகள் சேகரிப்போம் என்றும் பாரதி நல்லையா தெரிவித்தார்.